Home -- Tamil? -- Perform a PLAY -- 147 (Nothing is too hard for God 2)
147. இறைவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை 2
முடியாது! முடியவே முடியாது! ஆபிரகாமிற்கு நிச்சயம் இப்படிப்பட்ட சிந்தனை வந்திருக்கும். ஏன்? அவன் வயதானவன். அவன் மனைவி சாராளும் வயதானவள். நீண்ட காலத்திற்கு முன்பு இறைவன், ஒரு மகனை அவர்களுக்குத் தருவதாக வாக்குப்பண்ணினார். ஆனால் 89 வயதில் பிள்ளையை பெறுவது அல்லது 99 வயதில் அப்பாவாக மாறுவது என்பது முடியாத காரியம்.
இறைவன் அவனை மறந்துவிட்டாரா?
ஆபிரகாம் தனது கூடாரவாசலில் அமர்ந்திருந்தான். அது மதிய நேரம். மிகவும் வெப்பமாக இருந்தது. அப்போது அங்கு விருந்தாளிகள் வந்தார்கள். அவர்கள் மூன்று ஆண்கள். ஆபிரகாம் அவர்களுக்கு முன்பாகப் பணிந்து கொண்டான். அவர்களில் ஒருவர் இறைவன் என்பதை அவன் யூகித்திருந்தானா?
ஆபிரகாம்: “என் ஆண்டவரே, இனி பயணம் வேண்டாம். இங்கே தங்கியிருங்கள். நான் உங்களுக்கு தண்ணீர் கொண்டு வருகிறேன். உங்கள் பாதங்களைக் கழுவுங்கள். அந்த நிழலில் அமர்ந்திருங்கள். நான் உங்களுக்கு உணவு ஆயத்தமாக்கி கொண்டு வருகிறேன்”.
மனிதன்: “நீ சொன்னபடியே செய்”.
ஆபிரகாம் விரைந்து சென்று ஆயத்தம்பண்ண ஆரம்பித்தான். சாராள் ரொட்டிகளைச் சுட்டாள். வேலைக்காரன் கன்றுக்குட்டியை அடித்துக்கொண்டு வந்தான். ஆபிரகாம் மிக அருமையான மதிய உணவை வெண்ணெய் மற்றும் பாலுடன் பரிமாற ஆரம்பித்தான்.
மனிதன்: “உன் மனைவி சாராள் எங்கிருக்கிறாள்?”
ஆபிரகாம்: “அவள் கூடாரத்தில் இருக்கிறாள்”.
மனிதன்: “நான் உனக்கு ஒரு உண்மையை சொல்கிறேன். ஒரு வருடம் கழித்து நான் திரும்பி வரும்போது, சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்”.
(சிரிக்கும் சத்தம்)
சாராள் சிரித்தாள். அவளுக்கு இது நகைச்சுவையாக இருந்தது. முடியாது என்று அவள் நினைத்தாள். எனக்கு வயதாகிவிட்டது என்று எண்ணினாள்.
மனிதன்: “ஏன் சாராள் சிரித்தாள்? தனக்கு ஒரு குழந்தை பிறப்பது முடியாத காரியம் என்று ஏன் எண்ணுகிறாள்? இறைவனால் செய்யக் கூடாத கடினமான காரியம் ஒன்று உண்டோ? இன்னும் ஒரு வருடத்தில் சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்”.
இறைவனால் கூடாத காரியம் ஒன்றுண்டோ? பத்து முறைகளுக்கும் மேலாக இறைவன் ஆபிரகாமிற்கு மகனைத் தருவதாக வாக்குப்பண்ணினார். ஒருமுறை முற்றிலும் சிறப்பான ஒரு சூழ்நிலையில் பேசினார்.
இறைவனின் சத்தம்: “ஆபிரகாம், வானத்தை அண்ணாந்து பார். நட்சத்திரங்களை எண்ணிப்பார். இந்த அளவு நான் உன் சந்ததியை பெருகப்பண்ணுவேன்”.
ஆபிரகாம் நட்சத்திரங்களை எண்ண முடியவில்லை. ஆனால் இறைவனை நம்பினான். நட்சத்திரங்களால் நிறைந்துள்ள மிகப்பெரிய வானம், இறைவன் பெரியவர் என்பதை அவனுக்கு காண்பித்தது. அவருக்கு இயலாத காரியம் ஒன்று உண்டா?
இல்லை!
100 வயது ஆபிரகாம் அப்பாவாக மாறினார். 90 வயதில் மகிழ்ச்சியுள்ள அம்மாவாக சாராள் மாறினாள். இதை கற்பனை செய்து பார்.
(குழந்தை சிரிக்கும் சத்தம்) நீண்டகாலம் எதிர்பார்த்திருந்த அந்த மகனுக்கு ஈசாக்கு என்று பேர் வைத்தார்கள்.
இறைவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நீ கற்பனை செய்வதை விட அவர் பெரியவர். நட்சத்திரங்களை எண்ண முயற்சித்துப்பார். அப்போது இறைவன் மிகவும் பெரியவர் என்பதை நீ உணர்ந்துகொள்வாய்.
மக்கள்: உரையாளர், ஆபிரகாம், மனிதன், இறைவனின் சத்தம்.
© Copyright: CEF Germany