Home -- Tamil -- Perform a PLAY -- 061 (A new star 1)
61. ஒரு புதிய நட்சத்திரம் 1
இரவு வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. தொலைநோக்கி மூலமாக பாபிலோனில் இருந்த மனிதர்கள் வானத்தின் நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
ஞானி 1: “அங்கே பார், ஒரு புதிய நட்சத்திரம், இதற்கு முன்பு இப்படி நான் பார்த்ததே இல்லை”.
ஞானி 2: “நீ சொல்வது சரி. திடீரென்று ஒரு புதிய நட்சத்திரம். இதன் அர்த்தம் என்ன?”
இந்த ஞானிகள் வான சாஸ்திரங்களைக் குறித்து அதிகம் அறிந்திருந்தார்கள். தங்கள் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க அவர்கள் கற்பலகைகள் மற்றும் நீண்ட சுருள்களை ஆராய்ந்தார்கள்.
ஞானி 1: “இதோ பதில்: யூதர்களுக்கு ஒரு இராஜா பிறந்திருப்பதை இந்த நட்சத்திரம் காண்பிக்கின்றது”.
ஞானி 2: “மிகவும் சிறப்புமிக்க ஒரு இராஜா! நாம் அவரைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வேண்டும். அவர் நமக்கும் இராஜாவாக இருக்கிறார்”.
நித்திய இராஜா இயேசு பிறந்துள்ளார். இறைவன் முதலாவது மேய்ப்பர்களுக்கு கூறினார். பின்பு பாபிலோனின் ஞானிகளுக்கு வெளிப்படுத்தினார்.
அந்த ஞானிகள் தங்கள் பயணப் பைகள் மற்றும் பரிசுகளை ஒட்டகங்களின் மேல் ஏற்றிக்கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் 620 மைல்கள் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் பல மாதங்களாக பயணம் செய்து வந்தார்கள். அவர்களுக்கு இயேசு அவ்வளவு முக்கியமானவராக இருந்தார். அவரை ஆராதிக்க விரும்பினார்கள். தங்கள் வாழ்வில் அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்டதை அனைவருக்கும் காண்பிக்க விரும்பினார்கள். இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நீயும் இதைப் போன்று பிறருக்கு அவரைக் காண்பிப்பாயா? உனது ஆண்டவரும், இரட்சகருமாக அவர் இருக்கும்படி விரும்புகிறாயா?
களைப்புற்றவர்களாய், அந்த ஞானிகள் இறுதியில் எருசலேம் பட்டணத்தை அடைந்தார்கள்.
ஞானி 1: “புதிதாகப் பிறந்திருக்கும் இராஜா எங்கே? நாங்கள் அவருடைய நடசத்திரத்தைக் கண்டு, அவரை ஆராதிக்க வந்தோம்”.
ஒருவரும் அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. மக்கள் அதிர்ச்சியுற்றார்கள். ஏரோது இராஜா மிகவும் கலக்கமடைந்தான். இந்த இராஜாவிற்கு ஒவ்வொருவரும் பயந்தார்கள். இப்போது தனது பதவி பறிபோய்விடுமோ என்று எண்ணி இராஜா பயந்தான். அவன் உடனடியாக வேதபாரகர்களை அழைத்தான்.
ஏரோது: “யூதரின் இராஜா எங்கே பிறப்பார் என்பது உங்களுக்குத் தெரியுமா?”
வேதபாரகன்: “நாங்கள் அதை அறிந்திருக்கிறோம். இறைவனுடைய வார்த்தை இப்படிக் கூறுகிறது. பெத்லகேமில் இருந்து இராஜா வருவார்”.
இந்த வார்த்தைகள் ஏரோதை பட்டயத்தைப் போல் தாக்கின. ஆனால் தனது பயத்தை பிறர் காணாதபடி நடந்துகொண்டான். அவன் பாபிலோனில் இருந்து வந்தவர்களை இரகசியமாக அழைத்தான்.
ஏரோது: “இந்த நட்சத்திரம் எப்போது தோன்றியது? இதை முதலில் எப்போது கண்டீர்கள்?”
அவர்கள் சரியான தேதியைக் கூறினார்கள். அவன் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதை அறிந்து கொண்டான்.
ஏரோது: “பெத்லகேமிற்கு சென்று குழந்தையைப் பாருங்கள். அவரைக் கண்டவுடன் நானும் வந்து அவரை ஆராதிக்கும்படி என்னிடம் திரும்பி வந்து கூறுங்கள்”.
அவன் உண்மையாக இதைச் செய்ய விரும்பினானா? இல்லை. இந்த மோசமான பொய்காரன் தான் மட்டுமே இராஜாவாக இருக்க விரும்பினான். எனவே இந்த புதிய இராஜாவைக் கொல்ல விரும்பினான். இந்த ஞானிகள் எருசலேமை விட்டுச் சென்றார்கள். அடுத்த நாடகத்தில் நீங்கள் என்ன நடந்தது என்பதைக் காண்பீர்கள்.
மக்கள்: உரையாளர், இரண்டு ஞானிகள், ஏரோது, வேதபாரகன்.
© Copyright: CEF Germany