Home -- Tamil -- Perform a PLAY -- 041 (The Chief and Jesus)
41. தலைவனும் இயேசுவும்
ஒரு இறைப்பணியாளர் காட்டு வழியே வந்தார். வானத்தில் சூரியன் பிரகாசமாய் ஒளிர்ந்தது. இறுதியில் அவர் ஒரு இந்தியக் கிராமத்தை அடைந்தார். அந்த ஊர் தலைவன் அவரை வரவேற்றான். எந்தவொரு வெள்ளை மனிதனும் இந்த ஆதிவாசி மக்களுக்கு இயேசுவைக் குறித்துச் சொல்ல வந்ததில்லை. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். இறைப்பணியாளர் மகிழ்ச்சி அடைந்தார்.
இறைப்பணியாளர்: “இறைவன் என்னை உங்களிடத்தில் அனுப்பினார். நீங்கள் பரலோகிற்கு செல்லும் வழியை அறிந்து கொள்ள முடியும்”.
தலைவன் இந்த நற்செய்தியைக் கேட்டு சந்தோஷப்பட்டான். ஏதோ ஒன்றை எடுக்க அவன் எழுந்து சென்றான்.
தலைவன்: “தலைவன் இந்த கோடாரியை இறைவனுக்கு கொடுக்கிறான்”.
பின்பு அவன் தொடர்ந்து கவனித்தான்.
இறைப்பணியாளர்: “இறைவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அவரிடம் வரவேண்டும் என்று விரும்புகிறார். இறைவன் பரிசுத்தமுள்ளவர். உங்களது பாவங்கள் அவரிடம் நீங்கள் நெருங்காதபடி தடையாய் இருக்கின்றன. பாவிகள் பரலோகில் பிரவேசிக்க இயலாது”.
இதைக் கேட்டவுடன் ஊர் மக்கள் கவலை கொண்டார்கள். அவர்கள் திருட்டு, பொய், கொலை போன்ற பாவங்களைச் செய்திருந்தபடியால், வெட்கமடைந்தார்கள்.
இறைப்பணியாளர்: “கவலைப்படாதிருங்கள். இறைவன் உங்களை நேசிக்கிறார். உங்கள் பாவங்களை மன்னிக்க விரும்புகிறார்”.
இதைக் கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்த தலைவன் எழுந்து சென்று அழகான, வண்ணமயமான போர்வையைக் கொண்டு வந்தான்.
தலைவன்: “இறைவன் என்னை நேசிக்கிறார். நான் அவருக்கு இந்த போர்வையைத் தருகிறேன்”.
இறைப்பணியாளர்: “இறைவன் எல்லோருடைய பாவங்களையும் மன்னிக்கும்படி, தனது சொந்தக் குமாரனை இந்த உலகிற்கு அனுப்பினார்”.
இறைவன் இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கிறார். தலைவன் இப்போது சென்று விலையுயர்ந்த ஒன்றை கொண்டு வந்தான்.
தலைவன்: “இறைவனுக்கு தலைவன் தனது குதிரையைக் கொடுக்கிறான். இறைவனுக்கு கொடுக்க இதற்கு மேல் ஒன்றுமில்லை”.
உண்மையாகவே ஒன்றுமில்லையா? அருட்பணியாளர் தொடர்ந்து பேசினார்.
இறைப்பணியாளர்: “இயேசு உங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார், அவர் உங்களை நேசிக்கிறார். அவரை விசுவாசியுங்கள். உங்களை அவர் மன்னிப்பார். ஒரு நாளில் பரலோகிற்கு உங்களை அழைத்துச் செல்வார்”.
தலைவனின் முகம் ஒளிர்ந்தது.
தலைவன்: “நான் இறைவனுக்கு கொடுக்க வேண்டிய ஒன்று உள்ளது. எனது இருதயத்தை அவருக்குத் தருவேன். அவர் எனக்காக மரித்தார் என்பதை விசுவாசிக்கிறேன்”.
இன்னும் அநேகர் இதைப் போலச் சொன்னார்கள். மகிழ்ச்சியுடன் தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பினார்கள். நீயும் இந்த வழியில் மகிழ்ச்சியை பெற விரும்புகிறாயா? தலைவனைப் போல செயல்படுங்கள். ஆண்டவராகிய இயேசுவை விசுவாசியுங்கள்.
மக்கள்: உரையாளர், இறைப்பணியாளர், தலைவன்.
© Copyright: CEF Germany