Home -- Tamil? -- Perform a PLAY -- 101 (Well-hidden 1)
101. நல்ல மறைவு 1
பேட்ரிக் மகிழ்ச்சியுடன் கூறினான். “எனக்கு ஒரு குழந்தை பிறந்தது” என்று அவன் சொன்ன போது, நாங்கள் அனைவரும் சந்தோஷப்பட்டோம்.
அநேக ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் மிரியாம் தனக்கு ஒரு தம்பி பிறந்திருப்பதை எண்ணி சந்தோஷப்பட்டாள். அவன் மிகவும் அழகாய் இருந்தான். ஆனாலும் அவனைக் குறித்து மிரியாம் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. பார்வோனின் கொடூர கட்டளையின் நிமித்தம், அவளின் தாய் அவனை மறைத்து வைத்திருந்தாள்.
பார்வோன்: “இஸ்ரவேலரின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. அவர்கள் நமது எதிரிகளாக மாறிவிடுவார்களோ என்று நான் பயப்படுகிறேன். என் மக்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். ஒரு இஸ்ரேலியப் பெண் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால், நீங்கள் உடனடியாக அதை நைல் நதியில் தூக்கி எறிய வேண்டும்”.
கொலை செய்யும்படியான ஓர் கொடூரக் கட்டளை இது! இவ்விதமாக இஸ்ரவேலர்களை அவன் படைபலத்தினால் தனக்கு அடிமைகளாக மாற்றினான்.
இருப்பினும் இந்த சிறிய ஆண் குழந்தையின் பெற்றோர்கள் இறைவனை நம்பினார்கள். தங்களது மகனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள். இறைவனின் காண இயலா கரம் இந்த சிறிய குழந்தையை பாதுகாத்தது. ஆனால் அந்த குழந்தை வளர்ந்து வந்த போது, அதற்கு மேல் அவர்களால் மறைத்து வைக்க முடியவில்லை.
மிரியாம்: “அம்மா! இந்த நாணல் இலைகளை வைத்து என்ன செய்கிறாய்?”
அம்மா: “நான் ஒரு நாணற்பெட்டி செய்கிறேன். இந்தப் பெட்டியைச் சுற்றிலும் பூசுவதற்கு அந்த பிசினையும், சீலையும் எடுத்து தா?”
மிரியாம்: “அம்மா எதற்காக அது உனக்குத் தேவைப்படுகிறது?”
அம்மா: “அப்போது தான் இந்தப் பெட்டிக்குள் தண்ணீர் புக முடியாது. மிரியாமே! நம்முடைய செல்லத்தை நாம் பிரியப் போகிறோம்”.
மிரியாம்: “அம்மா! நீங்கள் தம்பியை என்ன செய்யப் போகிறீர்கள்?”
அம்மா: “நான் இந்தப் பெட்டிக்குள் அவனை வைத்து, நைல் நதியின் கரையோரத்தில் உள்ள நாணற்செடிகளின் மத்தியில் வைக்கப் போகிறேன்”.
மிரியாம்: “அப்புறம்?”
அம்மா: “நாம் காத்திருந்து பார்ப்போம். இறைவனின் காண இயலா கரம் அவனை எவ்விதம் பாதுகாக்கின்றது என்பதைக் காண்போம்”.
அவர்கள் அமைதியாக நதியை நோக்கி நடந்தார்கள். அந்த தாய்க்கு இது எளிதான காரியம் அல்ல. ஆனாலும் அவள் செய்தாள். அவள் இறைவனை நம்பினாள்.
அம்மா: “மிரியாம்! நாணற் செடிகளின் பின்னால் மறைந்துகொள். என்ன நடக்கிறது என்பதைக் கவனி. நான் இனிமேல் இங்கு இருக்கக் கூடாது. நான் வீட்டிற்கு செல்கிறேன்”.
அப்போது சிலர் அங்கு வந்தார்கள். பார்வோனின் மகள் தனது வேலைக்காரிகளுடன் நைல் நதிக்கு குளிக்க வந்திருந்தாள்.
இளவரசி: “அது என்ன? அந்த நாணற்பெட்டியை என்னிடம் கொண்டு வாருங்கள்”.
மிரியாமின் இருதயம் வேகமாக துடித்தது. இந்த இளவரசி நைல் நதியில் அவளின் தம்பியை எறிந்துவிடுவாளோ?
(குழந்தை அழும் சத்தம்)
இளவரசி: “இது இஸ்ரேலிய ஆண் குழந்தை. இதைக் கண்டு நான் இரக்கப்படுகிறேன்”.
மிரியாம் மறைவிலிருந்து வெளியே வந்தாள்.
மிரியாம்: “இந்தக் குழந்தைக்கு பால்கொடுக்கும் படி நான் ஒரு எபிரெயப் பெண்ணை அழைத்து வரட்டுமா?”
இளவரசி: “அருமையான யோசனை. உடனடியாக அழைத்து வா”.
மிரியாம் யாரை அழைத்து வந்தாள் என்பதை நீ கற்பனை செய்ய முடியும். அந்த குழந்தையின் சொந்த தாய் வந்தாள். சில ஆண்டுகள் அந்த பிள்ளையை பராமரித்து, வளர்த்தாள். அவர்கள் முழு இருதயத்துடன் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். அவருடைய காண இயலா கரம் அவர்களை அற்புதமாக பாதுகாத்த, இறைவன் உன்னையும் பாதுகாக்கிறார் என்பது உண்மையான காரியம். அவருடைய பாதுகாப்பிற்காக அவருக்கு நன்றி செலுத்து”.
மக்கள்: உரையாளர், பார்வோன், மிரியாம், அம்மா, இளவரசி.
© Copyright: CEF Germany