Home -- Tamil -- Perform a PLAY -- 066 (He’s finally here)
66. இயேசு இங்கிருக்கிறார்
ஸ்வென்: “அவர் எப்போது வருவார்?”
ஸ்வென்னால் காத்திருக்க முடியவில்லை. அவன் ஜன்னலை நோக்கி ஓடிச் சென்று பார்த்தான்.
ஸ்வென்: “அம்மா, எப்போது அப்பா வீட்டிற்கு வருவார்?”
அம்மா: “அவர் தாமதிக்கமாட்டார். தனது வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் வந்துவிடுவார். அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கமாட்டார் என்று நம்புகிறேன்”.
ஸ்வென்: “அவர் எனக்கு புதிய கம்ப்யூட்டர் விளையாட்டுப் பொருள் வாங்கித் தரப் போகிறார். அவர் சீக்கிரம் வர வேண்டும்”.
அவர் சீக்கிரம் வரவேண்டும்! இஸ்ரவேல் மக்கள் அநேக ஆண்டுகள் முன்பு இதைப் போன்றே எண்ணினார்கள். அவர்கள் காத்திருந்தார்கள். இறைவன் வாக்குப்பண்ணிய இரட்சகர் சீக்கிரம் வருவார் என்று நம்பினார்கள். அந்திரேயாவும் காத்திருந்தான். இரட்சிப்பையும், சமாதானத்தையும் கொண்டு வருபவரை எதிர்நோக்கி இருந்தான். அவன் எப்போதும் யோவானுடன் இருப்பதை விரும்பினான். அவன் எப்போதும் அவரைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவரைப் பார்த்திருந்தான்!
அந்திரேயாவின் வாழ்வில் அந்த சிறப்பான நாள் வந்தது. யோர்தான் நதியில் யோவான்ஸ்நானகன் அருகே அவன் நின்று கொண்டிருந்தான். திடீரென்று யோவான் சத்தமிட்டுக் கூறினான்.
யோவான்: “அங்கே பாருங்கள், இயேசு! வாக்குப்பண்ணப்பட்ட இரட்சகர்”.
இயேசு நின்று கொண்டிருந்த பக்கமாய் அந்திரேயா நோக்கிப் பார்த்தான்.
அந்திரேயா: “அங்கே அவர் இருக்கிறார்”.
அந்திரேயா இயேசுவைக் குறித்து அறிய விரும்பினான். அவன் தனது நண்பனுடன் இயேசுவின் பின்னால் நடக்க ஆரம்பித்தான். தன்னைத் தேடுபவர்களையும், தன்னைக் குறித்து அறிய விரும்புவர்களையும் இயேசு அறிந்திருக்கிறார். அவர் திரும்பிப் பார்த்து கேட்டார்:
இயேசு: “யாரைத் தேடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?”
அந்திரேயா: “நீர் எங்கே வசிக்கிறீர்?”
இயேசு: “என்னுடன் வாருங்கள், நான் உங்களுக்கு காண்பிப்பேன்”.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இயேசுவுடன் சென்றார்கள். அவர் வசித்த இடத்திற்கு சென்றார்கள். நாள் முழுவதும் அவருடன் தங்கினார்கள். இயேசுவுடன் இருப்பது மிகப்பெரிய சந்தோஷம் ஆகும். உனக்கு இந்த சந்தோஷம் உண்டா? அந்திரேயாவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தான். இந்த அற்புதமான அனுபவத்தைக் குறித்து யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தான். இயேசுவைக் குறித்து இன்று நீ யாருக்கு சொல்ல முடியும்? அந்திரேயா முதலில் தனது சகோதரனிடம் கூறினான்.
அந்திரேயா: “சீமோன், நாங்கள் அவரைக் கண்டோம்! இயேசு இங்கே இருக்கிறார். என்னுடன் வா, நீ வந்து அவரைப் பார்”.
அந்திரேயாவின் மகிழ்ச்சி தொற்றி பரவக்கூடியதாக இருந்தது. சீமோன் தனது சகோதரன் சொன்னதை நம்பி, அவனுடன் சென்றான். இயேசுவும் அவனுக்காக காத்துக்கொண்டிருந்தார். இயேசு அவனுடைய பெயரைக் கூட அறிந்திருந்தார்.
இயேசு: “நீ சீமோன், இனிமேல் நீ பேதுரு என்று அழைக்கப்படுவாய்”.
ஒரு புதியபெயர். இயேசு ஒரு மனிதனை புதிய நபராக மாற்றுகிறார். இயேசுவை பின்பற்றுதல் நம்மையும் மாற்றி அமைக்கும்.
இது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. அவர் என்னையும் மாற்றியிருக்கிறார்.
மக்கள்: உரையாளர், ஸ்வென், அம்மா, யோவான், அந்திரேயா, இயேசு.
© Copyright: CEF Germany