Home -- Tamil -- Perform a PLAY -- 058 (God puts everything right 6)
58. இறைவன் அனைத்தையும் நன்மையாக முடியப்பண்ணுகிறார் 6
என்ன ஓர் அற்புதமான நாள்! தானியங்களை வாங்க யோசேப்பின் சகோதரர்கள் மீண்டும் எகிப்திற்கு இரண்டாம் முறை வந்தார்கள். 20 வெள்ளிக்காசிற்கு விற்கப்பட்ட தங்கள் சகோதரன் தான் எகிப்தின் அதிபதி என்பதை அவர்கள் அறியவில்லை.
யோசேப்பு ஓர் விருந்தை ஆயத்தம்பண்ணினான். வீட்டில் உள்ள அதே வரிசைப்படி சகோதரர்களுக்கு இருக்கை போடப்பட்டிருந்தது. அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். தானியங்களுடன் மீண்டும் அவர்கள் சென்றார்கள். ஆனால் வெகுதூரம் செல்லவில்லை.
வேலைக்காரன்: “நில்லுங்கள், அசையாதீர்கள், எங்கள் அதிபதியின் வெள்ளிக் கோப்பையை நீங்கள் திருடிவிட்டீர்கள்”.
சகோதரன்: “இல்லை, நாங்கள் எதையும் திருடவில்லை. நீங்களே சோதித்துப்பாருங்கள்”.
வேலைக்காரன் அனைவரின் சாக்குப்பைகளையும் சோதித்துப் பார்த்தான். கடைசியில் பென்யமீனின் சாக்கு திறக்கப்பட்டது.
வேலைக்காரன்: “இவன் தான் திருடன். எல்லாரும் திரும்பிவாருங்கள். நீங்கள் அங்கு அடிமைகளாக இருக்க வேண்டும்”.
அவர்கள் யோசேப்பின் முன்பு கொண்டு செல்லப்பட்டார்கள். அவன் முன்பு நடுங்கி விழுந்தார்கள். தனது சகோதரர்களை பரீட்சித்துப் பார்க்க வேலைக்காரர்களில் ஒருவனிடம், சாக்கில் வெள்ளிக் கோப்பையை போடும்படி அவன் கூறியிருந்தான். அவர்கள் மாற்றம் அடைந்துள்ளார்களா? அல்லது அவர்களின் இருதயங்களில் இன்னும் தீமை உள்ளதா? யோசேப்பு அவர்களிடம் கடுமையாகப் பேசினான்.
யோசேப்பு: “ஏன் இப்படிச் செய்தீர்கள்? அந்த திருடன் எனது அடிமையாக இங்கு இருக்கட்டும்”.
அப்போது யூதா பேசினான்.
சகோதரன்: “பென்யமீனை அனுப்பிவிடுங்கள். அவனுக்குப் பதிலாக உமது அடிமையாக நான் இருக்கிறேன். இல்லையெனில் எங்கள் தகப்பன் வேதனையில் இறந்தே விடுவார்”.
சகோதரர்கள் ஒருமனப்பட்டு பேசினார்கள். அப்போது யோசேப்பு தன்னை வெளிப்படுத்தினான்.
யோசேப்பு: “நீங்கள் என்னை அறியவில்லையா? நான் தான் யோசேப்பு, உங்கள் சகோதரன்”.
அவர்களால் எதுவும் பேச இயலவில்லை. யோசேப்பு சந்தோஷத்தின் மிகுதியினால் அவர்களை கட்டியணைத்து அழுதான்.
யோசேப்பு: “நீங்கள் அனைவரும் உயிருடன் இருக்கும்படி இறைவன் என்னை எகிப்திற்கு அனுப்பினார். எனது தகப்பன் மற்றும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வாருங்கள். இன்னும் ஐந்து ஆண்டுகள் பஞ்சம் தொடரும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன்”.
அநேக பரிசுப்பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
யோசேப்பு உயிருடன் இருப்பதை அறிந்த தகப்பன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். எகிப்தின் சிறந்த இடத்திற்கு தங்கள் உடைமைகளுடன் 70 பேர் திரும்பி வந்தார்கள். 20 ஆண்டுகள் கழித்து, தனது தகப்பனை யோசேப்பு கண்டான். இறைவன் அனைத்தையும் நன்மையாக முடியபண்ணினார். சகோதரர்கள் தங்கள் தவறான செயல்களை அறிக்கையிட்டார்கள்.
சகோதரன்: “யோசேப்பு, நாங்கள் உனக்குச் செய்த தீமைகளுக்காக எங்களை மன்னித்து விடு, நாங்கள் அதற்காக மிகவும் மனம் வருந்துகிறோம்”.
யோசேப்பு: “நான் உங்களை மன்னிக்கிறேன். நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் இறைவன் அதை நன்மையாக முடியப்பண்ணினார்”.
இறைவன் அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறார். தமது மக்களை உயிருடன் காப்பது அவருடைய திட்டமாக இருந்தது.
மக்கள்: உரையாளர், வேலைக்காரன், யோசேப்பு, சகோதரன்.
© Copyright: CEF Germany