Home -- Tamil? -- Perform a PLAY -- 127 (Too late)
127. இது மிகவும் தாமதம்
அவர்கள் கரையை அடைந்தார்கள். படவை விட்டு வெளியே இறங்கினார்கள். இயேசுவை சந்திக்கும்படி யவீரு வந்தான். அவன் கூட்டத்தின் ஊடே வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்தான்.
யவீரு: “என் மகள் சாகும் தருவாயில் இருக்கிறாள். சீக்கிரம் வாரும். நீர் உமது கையை அவள் மீது வையும். அப்போது அவள் சுகமடைவாள்”.
இயேசு அவனுடன் சென்றார். அவர்கள் வேகமாகச் சென்றார்கள். இயேசு திடீரென்று நின்றார்? ஏன்?
இயேசு: “என்னை யார் தொட்டது?”
மனிதன்: “நான் இல்லை. ஒவ்வொருவரும் கூட்ட நெரிசலில் உம்மைத் தள்ளுகிறார்கள்”.
இயேசு திரும்பிப் பார்த்தார். அவருடைய பாதத்தருகே ஒரு பெண் நடுக்கத்துடன் காணப்பட்டாள்.
பெண்: “உமது வஸ்திரத்தின் ஓரத்தை தொட விரும்பினேன். நான் 12 ஆண்டுகளாக வியாதியால் கஷ்டப்படுகிறேன். எந்த மருத்துவரும், எந்த மருந்தும் எனக்கு உதவவில்லை. நான் சுகமடையும்படி எனது பணம் அனைத்தையும் செலவழித்துவிட்டேன். இப்போது உமது வஸ்திரத்தை நான் தொட்டபோது, உடனடியாக சுகம் அடைந்தேன்!”
இயேசு: “உன் விசுவாசம் உன்னை காப்பாற்றியது. பயப்படாதே!”
விசுவாசம் நன்மையைக் கொண்டு வருகிறது. நீ இயேசுவின் மீது விசுவாசம் கொண்டிருந்தால் ஏமாற்றம் அடையமாட்டாய். நீ விசுவாசிக்கிற காரியம் உனக்கு நேரிடும்.
செய்தியாளர்: “யவீரு எங்கே? யவீரு! நான் ஒரு துக்க செய்தியுடன் வந்திருக்கிறேன். உனது மகள் மரித்துவிட்டாள்”.
அவள் 12 வயது உடையவள். காற்றில் அணைந்து போகும் மெழுகுவர்த்தியின் ஒளியைப் போல யவீருவின் விசுவாசத்திற்கு ஆபத்து நேரிட்டது.
இயேசு: “பயப்படாதே. என்னில் விசுவாசம் உள்ளவனாயிரு!”
இயேசுவின் இந்த வார்த்தைகள் அவனுடைய விசுவாசத்தைப் பெலப்படுத்தியது. பின்பு அவர்கள் யவீருவின் வீட்டை நெருங்கி வந்தார்கள். அந்தத் தெரு முழுவதும் மக்கள் கூடி அழுகின்ற சத்தம் கேட்டது.
இயேசு: “நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? பிள்ளை மரிக்கவில்லை”.
எல்லோரும் இயேசுவைப் பார்த்து ஏளனமாய் சிரித்தார்கள். அவள் மரித்திருப்பதை அனைவரும் தங்கள் சொந்தக் கண்களால் பார்த்திருந்தார்கள். இயேசு எல்லாரையும் வெளியே போகும்படி செய்தார். அவளின் பெற்றோர்கள் மற்றும் தனது மூன்று நெருங்கிய சீஷர்களுடன் பிள்ளை இருக்கும் அறைக்கு சென்றார். அந்த அறையில் முழு அமைதி காணப்பட்டது. இயேசுவின் வார்த்தைகளை யவீரு சிந்தித்துப் பார்த்தானா? “பயப்படாதே! என்னில் விசுவாசம் உள்ளவனாயிரு”.
இந்த சூழ்நிலையில் என்ன நம்பிக்கை அவனுக்கு இருந்திருக்கும்?
இயேசு அவளுடைய படுக்கைக்கு அருகே சென்று, அவளது கையைப் பிடித்தார்.
இயேசு: “தலீத் தாகூமி! மகளே! எழுந்திரு!”
அவள் கண்களைத் திறப்பதையும், படுக்கையை விட்டு எழுந்திருப்பதையும் பெற்றோர்கள் கண்டார்கள்.
இயேசு: “இவளுக்கு சாப்பிட ஏதாவது கொடுங்கள்”.
சுகமாக்குகிறவரும், மரித்தோரை உயிருடன் எழுப்புகிறவருமாகிய ஆண்டவர் இதைச் சொன்னார். இயேசுவால் எல்லாம் கூடும். அவரால் ஒரு காரியம் செய்ய முடியாது. அவரில் நம்பிக்கை கொண்டிருப்போரை ஏமாற்றம் அடையச் செய்ய முடியாது.
உன் வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் பயப்படாதே! அவரில் நம்பிக்கை உள்ளவனாயிரு!
மக்கள்: உரையாளர், யவீரு, இயேசு, மனிதன், பெண், செய்தியாளர்.
© Copyright: CEF Germany