Home -- Tamil -- Perform a PLAY -- 056 (God forgets no one 4)
56. இறைவன் எவரையும் மறப்பதில்லை 4
யோசேப்பு காத்திருந்தான். ஒரு வாரம் கடந்தது. மறுவாரம் கடந்தது, ஒருமாதம், இரண்டு மாதங்கள் …. நாட்கள் கடந்தன. யோசேப்பு நினைத்தான்.
யோசேப்பு: “நான் ஒரு தவறும் செய்யவில்லை. ஆனால் சிறையில் இருக்கிறேன். நான் வெளியில் வர ஏன் ஒருவரும் முயற்சிக்கவில்லை?”
சிறையில் இருந்து வெளியே சென்ற ஒரு கைதி, பார்வோனிடம் யோசேப்பைக் குறித்துப் பேசுவதாக வாக்குப்பண்ணி இருந்தான். ஆனால் யோசேப்பை முற்றிலும் அவன் மறந்துவிட்டான். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. யோசேப்பை மறக்காத ஒருவர் இருந்தார், அவர் இறைவன். யோசேப்பு மிகப்பெரிய அதிபதியாக வருவான் என்று அவர் வாக்குப்பண்ணியிருந்தார். இப்போது அந்த வாக்கு நிறைவேறும்படி இறைவன் செயல்பட ஆரம்பித்தார்.
பார்வோன் சொப்பனம் கண்டான். ஆனால் அதன் அர்த்தத்தை ஒருவரும் சொல்ல இயலவில்லை. அவன் கலக்கமடைந்தான். அப்போது பார்வோனின் பானபாத்திரக்காரத் தலைவனுக்கு திடீரென்று ஒரு காரியம் ஞாபகம் வந்தது.
பானபாத்திரக்காரத் தலைவன்: “சொப்பனத்திற்கு விளக்கம் கூறும் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் சிறையில் இருக்கிறான். நான் அவன் கூறியதை முழுவதும் மறந்துவிட்டேன்”.
பார்வோன்: “அவனை உடனடியாகக் கொண்டு வாருங்கள்”.
பார்வோனின் கட்டளை நிறைவேற்றப்பட்டது.
யோசேப்பு எகிப்தின் அரசன் முன்பு கொண்டு வரப்பட்டான்.
பார்வோன்: “நீ சொப்பனத்திற்கு விளக்கம் கூறுபவன் என கேள்விப்பட்டேன்”.
யோசேப்பு: “வலிமை மிக்க பார்வோனே, என்னால் இது இயலாது, ஆனால் இறைவனால் முடியும்”.
பார்வோன்: “நான் நைல் நதியின் அருகில் நின்று கொண்டிருந்தேன். ஏழு கொழுத்த பசுக்கள் நீரில் இருந்து வந்தன. ஏழு மெலிந்த பசுக்கள் அவைகளைத் தின்றன. பின்பு ஏழு கொழுமையான கதிர்களை ஏழு சாவியான கதிர்கள் விழுங்கிப் போட்டன. இதன் அர்த்தம் என்ன? உன்னால் இதற்கு அர்த்தம் கூறமுடியுமா?”
யோசேப்பு: “ஏழு செழிப்பான ஆண்டுகள் வரப்போவதை இறைவன் உமக்குக் கூறுகிறார். எகிப்தில் மிகச் செழிப்பான காலம் வரும். பின்பு ஏழு ஆண்டுகள் பஞ்சம் ஏற்படும். எந்த விளைச்சலும் இருக்காது. செழிப்பான ஆண்டுகளில் கிடைக்கும் தானியங்களை சேகரித்து வைத்து, ஏழு ஆண்டு பஞ்ச காலத்தில் மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி, ஒரு ஞானமுள்ள மனிதனைத் தெரிந்துகொண்டு, இந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்”.
பார்வோனிற்கு இந்த யோசனை சரியாகத் தெரிந்தது.
பார்வோன்: “யோசேப்பே! நீயே அந்த மனுஷன். இறைவன் உன்னுடன் இருக்கிறார். நீ எனக்குத் துணையாக இரு. எகிப்தில் ஒவ்வொருவனும் உனது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும்”.
இவ்விதமாக, எகிப்தில் அதிகாரம் மிகுந்த இரண்டாவது மனிதனாக யோசேப்பு மாறினான். அவனால் இதை நம்பவே இயலவில்லை. அவனுடைய சகோதரர்கள் அவனை வெறுத்தார்கள், அடிமையாக விற்கப்பட்டான், தவறு செய்யாதிருந்தும் சிறைச்சாலையில் வாடினான். ஆனாலும் இறைவன் அவனை மறக்கவில்லை. பத்து கடினமான ஆண்டுகளை யோசேப்பு கடந்து சென்றான். இறைவன் யாரையும் மறப்பதில்லை. உன்னையும் அவர் மறக்கமாட்டார். உன் வாழ்வில் அவர் மீது நம்பிக்கை வை. யோசேப்பின் மூலம் இறைவன் செய்ததைக் கண்டு நீ ஆச்சரியப்படப் போகிறாய்.
அடுத்த நாடகத்தில் நீ அதைக் காணமுடியும்.
மக்கள்: உரையாளர், யோசேப்பு, பானபாத்திரக்காரத் தலைவன், பார்வோன்.
© Copyright: CEF Germany